Monday, September 23, 2024

சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 11,931 பேருக்கு உடல் பரிசோதனை முகாம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 11,931 பேருக்கு உடல் பரிசோதனை முகாம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் 11,931 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் நிதிநிலை அறிவிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனைமுகாம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்து முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகராட்சியின் 4,571 நிரந்தரப் பணியாளர்கள், 7,360 தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 11,931 பேருக்கு இன்று முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தமாக 16 வகையானபரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி முழு சிறுநீர் பகுப்பாய்வு, ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை, கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்ரே, கண் காது பிரச்சினைகள் குறித்த பரிசோதனைகள், பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த பரிசோதனைகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெறும்.மேலும் மாநகராட்சி பணியாளர்களில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்க்குமக்களைத் தேடி மருத்துவம் மூலம்தொடர்ந்து மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள கட்டணமாக ஒரு நபருக்குரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டு, முதல்கட்டமாக 11,931 பணியாளர்களுக்கு ரூ.1.19 கோடி மாநகராட்சி மூலம் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு கூடுதல் சிகிச்சைகள் தேவைப்பட்டால், அரசு திட்டத்துடன் இணைந்து சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானுரெட்டி, வடக்கு வட்டார துணைஆணையாளர் கட்டா ரவி தேஜா,நிலைக்குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024