Sunday, September 22, 2024

செமிகண்டக்டர் இறக்குமதி ஏன்? நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட இளைஞர் எங்கே?

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செமிகண்டக்டர் இறக்குமதி செய்வது ஏன்? என்ற கேள்வியை கேட்டதால், திடீரென கோபமடைந்தார் நிர்மலா சீதாராமன்.

இதையடுத்து, அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. அவர் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்றிருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கிருந்து வெளியே வந்த போது பொதுமக்களுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவர், செல்போனின் முக்கிய உதிரி பாகமான செமிகண்டக்டரை வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், அந்த இளைஞரிடம் இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் குறிப்புகளைப் படித்து பிறகு, நேராக தில்லி வந்து தன்னை சந்தித்து விவாதம் நடத்துமாறு கூறினார்.

இதையும் படிக்க.. இந்தியர்களைக் கடத்தி சைபர் அடிமைகளாக்கி மோசடி! சினிமாவை விஞ்சும் கும்பல்!!

ஆனால், விடாமல் இளைஞர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் நிர்மலா சீதாராமன் கோபம் அடைந்தார். இந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என பத்திரிகையாளர்களை எச்சரித்தார். அங்கிருந்த பாஜகவினர், இளைஞரிடம் கேள்வி கேட்கக் கூடாது என எச்சரித்தனர். இந்த சூழ்நிலையில், அவரை காவல்துறையினர் சிலர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் விடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.

அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார், மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்டதற்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டாரா, பின்னர் விடுவிக்கப்பட்டாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

ஏற்கனவே கோவையில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியதற்காக, அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி அதில் வைக்கும் ஜாமுக்கு ஒரு ஜிஎஸ்டி என்றால் கம்ப்யூட்டரே குழம்பிவிடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய விடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆகி வந்தது.

இந்த நிலையில், கேள்வி கேட்ட சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், அந்த விடியோவையும் பாரதிய ஜனதா தரப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024