சைபர் குற்றங்கள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சைபர் குற்றங்கள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

சென்னை: “ஓய்வூதியதாரர்கள் சைபர் குற்றங்களால் தாங்கள் சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். எனவே, அவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தமிழக காவல் துறை டிஜிபி-யான சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு கணக்குகள் துறையானது 1951 அக்.01-ம் தேதியன்று நிறுவப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில், அக்டோபர் 1-ம் தேதியன்று இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களில் ‘பாதுகாப்பு கணக்குகள் துறை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதன்படி, சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்குகள் துறை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்டன. இதில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் விழாவுக்கு முன்னிலை வகித்தார். விழாவில் டிஜிபி-யான சங்கர் ஜிவால் பேசியதாவது: “முன்பெல்லாம் குற்றங்கள் நிகழும் இடத்தில் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் இருப்பர். ஆனால், இன்றைக்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாரும் சம்பவ இடத்துக்கு வருவதில்லை. அவர்கள் எங்காவது ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கணினி, மொபைல் போன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ அல்லது வெளிநாடுகளிலோ இருந்து கொண்டு இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சைபர் குற்றங்களில், படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வங்கியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். எனவே, சைபர் குற்றங்களால் பாதிக்கப்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்கள் நிகழ்ந்தால் பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

இதன் மூலம், இழந்த பணத்தை உடனடியாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக, ஓய்வூதியதாரர்கள் சைபர் குற்றங்களால் தாங்கள் சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். எனவே, அவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என சங்கர் ஜிவால் கூறினார். இவ்விழாவில், முப்படை ஓய்வூதியதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு துரித தீர்வுகளை காண சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024