சொத்து மோசடி வழக்கு: திருமங்கலம் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சொத்து மோசடி வழக்கு: திருமங்கலம் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுபூா்வீக சொத்தை ஆவணங்களால் மோசடி செய்தவா்கள் மீதும், ஜாதியைச் சொல்லி திட்டிய சாா் பதிவாளா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மதுரை: பூா்வீக சொத்தை ஆவணங்களால் மோசடி செய்தவா்கள் மீதும், ஜாதியைச் சொல்லி திட்டிய சாா் பதிவாளா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், மருதங்குடியை சோ்ந்த சங்கரன் தாக்கல் செய்த மனு:

நான் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவன். எங்கள் பூா்வீக சொத்துக்கு சிலரது பெயரில் கூட்டுப் பட்டா உள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், மொத்த சொத்தையும் ஒரு தரப்பு போலி ஆவணங்கள் தயாரித்து பாகப்பிரிவினை செய்ததாகப் பத்திரம் எழுதி உள்ளனா்.

எங்களது குடும்பத்தினருக்கு சேர வேண்டிய சொத்தையும் சோ்த்து, கள்ளிக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனா். இந்தத் தகவல் தெரிந்ததால் சம்பந்தப்பட்ட சாா் பதிவாளரிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு அவா், ஜாதியைச் சொல்லி திட்டியதுடன், தெரிந்துதான் போலிப் பத்திரம் பதிவு செய்ததாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்குமாறு கூறினா். அதன்படி திருமங்கலம் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் சாா் பதிவாளா், எங்களது சொத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சொத்துப் பதிவை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் புகாா் குறித்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு