சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; திமுக-வினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது; ஆளும் திமுகவினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. தமிழ் நாட்டில் திமுக ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் திரு. ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திமுக ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதோடு, களத்தில் நின்று போராடி வருகிறது.

ஸ்டாலினின் திமுக அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில்;

* மூன்று முறை மின்கட்டண உயர்வுடன் இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு

* பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு

* பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு; நியாய விலைக்கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை

* கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்;

* போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்

* சென்னை மாநகராட்சியில் மயான பூமியை தனியார் மயமாக்கும் முடிவு

* ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு; இதனால் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை

என்று தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.

முதல்-அமைச்சர் ஸ்டாலினின் திமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடித்தன மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை"

என்ற வள்ளுவரின் குறளுக்கு, 'கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர், ஆட்சியை ஆழிக்கும் படைக் கருவியாகும்' என்ற பொருளுக்கேற்ப நிழக ஆட்சியின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் இந்த ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்வதோடு;

"40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து மக்கள் நலன் கருதி. உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்'' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 8.10.2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மனித சங்கிலிப் போராட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தலைமைக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024