சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஓர் இயக்கம் 75 ஆண்டு காலம் நிலைத்து நிற்பதும், ஓர் இயக்கம் 75 ஆண்டு காலம் கழித்தும் கம்பீரமாகக் காட்சியளிப்பதும் சாதாரணமான சாதனை இல்லை என்று பவள விழாவில் குறிப்பிட்டிருக்கிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்.

உண்மைதான். இந்தச் சாதனைக்காக இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு இழந்திருக்கிறது? எவ்வளவு தொண்டர்களும் தோழர்களும் உயிரையும் உடைமைகளையும் இழந்திருப்பார்கள்? எவ்வளவு அடிநிலைத் தொண்டர்கள் கொடி கட்டி, கோஷம் போட்டு உழைத்து உழைத்து ஒன்றுமில்லாமல் போய்விட்டிருப்பார்கள்? அரசியல்ரீதியாகத் தவிர்க்க முடியாமல் எத்தனை சமரசங்களைச் செய்துகொண்டிருக்கிறது?

திமுக தொடங்கிய காலத்திலேயே முதல் சமரசம் – ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார் கட்சியின் பொதுச்செயலர் அண்ணா (பெரியார் இருந்த தலைவர் பதவி காலியாகவே விடப்பட்டது); ஆனால், அன்றைக்கு அது மிகவும் அவசியமாகப்பட்டது. ஏனென்றால், திராவிடர் கழகம் கறுப்புச் சட்டைக்காரர்கள் கட்சி, கடவுள் இல்லை என்பவர்களின் கட்சி என்பதாக அறியப்பட்டிருந்தது. இயக்க அரசியலிலிருந்து தேர்தல் அரசியலுக்காகச் செய்துகொள்ளப்பட்ட சமரசம் இது.

கச்சத்தீவு கைவிட்டுப் போனபோதும் காவிரியில் உரிமை பறிக்கப்பட்டபோதும் தமிழின வரலாற்றின் அழியாக் கறையென தமிழீழ மண்ணில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சுற்றிவளைத்துப் படுகொலை செய்யப்பட்டபோதும்கூட சமரசமாகச் சென்றது; அல்லது சகித்து ஏற்றுக்கொண்டது. இவற்றுக்குப் பின்னால் அரசியல் ரீதியாகவோ ஆட்சி ரீதியாகவோ எத்தனையோ காரணங்கள் இருக்கலாம், இருந்தது, இருக்கும்.

இன்றைக்கு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள் தமிழக மக்கள் (இந்த வெற்றி யாரால் ஆனது, எதனால் ஆனது எவ்வாறு ஆனது என்பதெல்லாம் இங்கே தேவைப்படாதவை).

‘வெள்ளி விழா ஆண்டிலும் பொன் விழா ஆண்டிலும் திமுகவே ஆட்சியில் இருந்தது. பவள விழா ஆண்டிலும் திமுகவே ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழாக் கொண்டாடும்போதும் திமுகவே ஆட்சியில் இருக்கும்’ என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

75 ஆண்டுகளாகத் தலைவர்களால் கட்டிக் காப்பாற்றிக் கொடுக்கப்பட்ட கழகத்தை நூற்றாண்டு கொண்டாடுவதற்காகவும், நூற்றாண்டின்போது ஆட்சியில் இருக்கவும் ‘சிந்தாமல் சிதறாமல்’ கைமாற்றிக் கொடுக்க வேண்டும் அல்லவா? முதல்வர் விரும்பியபடி ஆட்சியில் இருக்க வேண்டுமானால் இப்போது எப்படி இருக்க வேண்டும்?

நாடு முழுவதும் இன்றைக்குப் பேசப்படுகிற, முழக்கமாக உயர்த்தி முன்னிறுத்தப்படுகிற – தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக வழிநடத்திச் செல்கிற – திராவிட மாடல் என்பதற்கான அடித்தளம் என்பது திமுக மட்டுமே உருவாக்கியது அல்ல.

இன்றைக்குப் பலருக்கும் தெரியாமல்போன விஷயங்களில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டிற்குரிய அணைகள் உள்பட ஆதாரமான கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டுவிட்டன. இன்னமும்கூட வட மாநிலங்கள் பலவற்றில் சாத்தியப்படாத ஊருக்கு ஊர் பள்ளிகள் உருவாகிவிட்டன, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன.

காங்கிரஸ் தோற்று, 1967-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அண்ணாவும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்த காலங்களில் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் பயனுறத் தக்க எண்ணற்ற மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, சில விட்டுக்கொடுப்புகள், சில சமரசங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் நலன்களை முன்னெடுப்பதில் யாரும் குறை வைக்கவில்லை – இவ்வாறாகத்தான் இன்றைய திராவிட மாடல் – தமிழ்நாடு மாடல் உருவானது (திராவிடமா, தமிழா என்பது தனிப் பஞ்சாயத்து, அதை இங்கே கூட்டிக் குழப்பிக் கொள்ள வேண்டாம்).

ஜெயலலிதாவின் மரணப் படுக்கையில் இருந்தபோதுதான் தொடங்கியது எனலாம், தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரானவை என்று நன்றாகத் தெரிந்தபோதிலும் மத்திய அரசின் நெருக்குதலுக்குப் பயந்து சமரசமாகச் செல்வதும் விட்டுக்கொடுப்பதும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒப்புக்கொண்டிருக்கவே மாட்டார் என்ற எத்தனையோ விஷயங்களை அதிமுக அரசின் முதல்வர்கள் ஒப்புக்கொண்டனர்; விட்டுக்கொடுத்தனர்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர்.

ஆனால், இத்தனை பெரிய அதிகாரத்தை மக்கள் தந்திருந்தபோதும் இன்றைக்கு வெளியே தெரிந்தும் தெரியாமலும் எத்தனையெத்தனை சமரசங்கள்?

வாக்குறுதியாகக் கொடுத்த நீட் தேர்வு பிரச்சினையே இன்னமும் தீர்ந்த பாடில்லை. எத்தனையோ பள்ளிகள், எத்தனையோ கல்லூரிகள், எத்தனையோ பல்கலைக்கழகங்கள் நாம் உருவாக்கியவை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டிலுள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன? இவற்றுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வகையான அதிகாரம், சம்பந்தம் இருக்கிறது?

மாநில அரசின் பாடத் திட்டமே சரியில்லை என்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. எதிர்த்து விளக்க வேண்டிய கல்வித் துறை அமைச்சர்களோ நல்லனவற்றை ஏற்போம் என்கிறார்கள். மத்திய பாடத் திட்டத்துக்குப் பதிலாக மாநில பாடத் திட்டம் உருவாக்குவோம் என்றார்கள். ஆனால், எல்லாமும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்பதாகவே இருக்கின்றன என்கிறார்கள் வெளியேறிய வல்லுநர்கள்.

‘அனைத்து சாதியினரும் அரச்சகர்’ பிரச்சினையே இன்னமும் சிக்கலில்தான் இருக்கிறது. தமிழில் குடமுழுக்கு என்றாலும் இன்னமும் திருக்கோவில்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால், பழநியில் தமிழ் முருகன் மாநாட்டைத் திராவிட மாடல் அரசின் ஹிந்து அறநிலையத் துறை நடத்துகிறது. என்ன நினைத்தார்களோ, இந்த மாநாட்டுக்கு நேரில் செல்லாமல் காணொலியிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலினும் துணை முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலினும் பேசி முடித்துவிட்டார்கள் (ஒருவேளை அண்ணாவும் கலைஞரும் உயிருடன் இருந்து இந்த மாநாட்டைப் பார்த்திருந்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகையையும் கொண்டாடுகிறாயே, உடன்பிறப்பே என்று உச்சிமுகர்ந்திருப்பார்களா, என்னவோ? கண்டிப்பாகப் பெரியார் மட்டும் சகித்துக்கொண்டிருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது).

தமிழ்நாடு முழுவதும் வங்கிகள், அஞ்சலகங்கள், ரயில்வே உள்பட அனைத்து இடங்களிலும் வேற்று மொழிக்காரர்கள்தான் நிரம்பி வழிகிறார்கள். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அல்லது தமிழகத்தில் ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு தொடங்கிய இதன் வேகம் இன்னமும் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் எல்லாம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி விட்டுக்கொடுக்கப்படுகின்றன.

கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் தகர்ப்பதற்கான ஆப்புகளை இட்டு நிரப்புகிறார்கள். வெளிநாட்டுத் தூதரகங்கள் / தமிழ் இருக்கைகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிபுரிவதற்கு எதற்காக ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும்? தமிழும் ஆங்கிலமும் தெரிந்து நூறு பேர் விண்ணப்பித்திருந்தாலும் எங்கேயோ இருக்கிற ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்த சிலர் கூடுதல் தகுதி என்ற அடிப்படையில் அந்தப் பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்! இவ்வாறெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதாவது தமிழ்நாடு அரசுக்குத் தெரியுமா? தெரியவில்லை.

விட்டுக்கொடுப்புகளையும் சமரசங்களையும் இன்னமும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். மற்றவர்களை விடவும் ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே இவற்றைப் பற்றி அதிகமும் தெரியும்.

‘இன்றைக்கு நாங்கள் தலைமைக் கழகத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறோம் என்றால் – அதற்கு அடித்தளமாக இருப்பது கிளைக் கழகங்கள். அடிக்கட்டுமானம் ஸ்ட்ராங்கானதாக இருந்தால்தான் மேல் கட்டுமானமும் வலிமையானதாக அமையும். அந்த அடித்தளத்தைப் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியரும் இன்னும் எத்தனை எத்தனையோ தலைவர்களும் உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தலைவர்கள் எத்தனையோ தளபதிகளை, போராளிகளை, வீரர்களை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள்’ என்று பெருமிதப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், இன்றைக்கு இவற்றை எல்லாம் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? கட்சியிலும் ஆட்சியிலும் அதே உணர்வுடன், அதே வீச்சுடன் அடுத்தடுத்த தலைமுறை தயாராகிவிட்டிருக்கிறதா? அல்லது தயார் செய்யப்பட்டிருக்கிறதா? (மகாவிஷ்ணு சம்பவம் ஒன்றே போதும், எந்த லெவலில் இருக்கிறார்கள் என்பதற்கு).

‘இனமானம், மொழி மானம், சுயமரியாதையைக் கண் போல் காக்கும் அவரது கடமை உணர்வைக் கண்டு நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்’ என்று பவள விழாவில் செய்யறிவின் மூலம் உருவாக்கப்பட்ட உரையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டியிருக்கிறார் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி.

இவை மூன்றையும் கட்சியின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்திச் செல்ல வேண்டிய தேவையும் கடமையும்கூட இன்றைய திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் – கொள்கைகள் எல்லாம் வெறும் பேச்சளவுக்குதான்; நடைமுறையில் தேர்தல் அரசியலின்பாற்பட்ட திசை நோக்கிதான் எல்லாம் என்பதாக நீர்த்துப் போய்விட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல, இனமானம், மொழி மானம், சுயமரியாதை ஆகியவற்றுடன் திராவிடமும் நீர்த்துப்போய் கட்சியும் ஆட்சிக்கான அரசியலும்தான் மிச்சமிருக்கும் தி.மு.க.வின் நூறாவது ஆண்டில்!

(ஓமந்தூரார் வளாகத்திற்கு சட்டப்பேரவையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டினார் முதல்வராக, மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி. அதனாலேயே அதை மருத்துவமனையாக்கினார் ஜெயலலிதா. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தும்கூட அவருடைய கடைசி ஆசைகூட நிறைவேற்றப்படாமலேயேதான் மருத்துவமனையாக நிற்கிறது).

விநியோகத்துக்காக…

திருப்பதினாலே லட்டுதானே, இப்ப என்ன கொழுப்பு?

எல்லாம் நல்லாத்தானங்க போய்க்கிட்டிருந்துச்சு, இப்போ என்ன திடீர்னு இந்த லட்டு மேட்டர்? அதுவும் பெரிய தேசியப் பிரச்சினையா வேற மாறிப் போயிருச்சு.

உள்ளபடியே இந்தத் திருப்பதி லட்டு விஷயத்தில் கடவுளுக்கும் பிரச்சினையில்லை, பக்தர்களுக்கும் பிரச்சினையில்லை போலத்தான் தெரிகிறது. ஆனால், இவர்களைத் தவிர எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். உண்மையிலேயே இந்த மக்களைப் பதற்றப்பட வைக்காமல், அமைதியாக, இந்தப் பிரச்சினையை நல்லவிதமாகக் கையாள வேண்டும் என்று ஒருவர் நினைத்திருந்தால்… என்ன செய்திருக்க வேண்டும்? விஷயத்தை டோம் போட்டுச் சர்ச்சையாக்காமல், உண்மை எனக் கண்டறிந்தால், உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, விலக்கி வைப்பது பற்றித்தானே சிந்தித்திருக்க வேண்டும்? வியாபாரம் என்றிருந்தால் லாபமும் இருக்கத்தானே செய்யும்? கோவிலாக இருந்தால் என்ன, தெய்வமாக இருந்தால் என்ன? நெய் விற்பனையில் எப்படியெல்லாம் லாபம் பார்க்க முடியும்? டெண்டர் கேட்டுதான் நெய் வாங்குகிறார்களாம், யார் குறைந்த விலைக்குக் கொடுக்கிறார்களோ அவர்களிடம்தான் வாங்குவார்களாம், சந்தையில் கிடைக்கும் விலைக்கு வாங்கினால் வேண்டுமானால் தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். போட்டி போட்டுக் குறைத்துக் கொடுக்க வலியுறுத்தினால் எத்தகைய தரத்தை எதிர்பார்க்க முடியும்?

இந்த நெய் சரியில்லை, அந்த நெய் சரியில்லை என்று எல்லாரையும் பேச வைத்துவிட்டுக் கடைசியாக ஏதோவொரு நெய்தான் நல்லது என்று சொன்னாலும் சொல்வார்கள் போல.

திருப்பதியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் சேர்க்கப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்பு இருந்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் (ஆமாம், இப்போது இந்தியா முழுவதும் கடை கடையாக லட்சக்கணக்கான பாட்டில்களில் சப்ளையாகி, மக்கள் எல்லாம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோமே, இந்த நெய்யெல்லாமும் விலங்குக் கொழுப்பு கலந்தவையா? கலக்காதவையா? வெஜிடேரியனா, நான்-வெஜிடேரியனா? ஆபீசர்ஸ் நீங்கதான் சொல்லோனும்!). ஆனால், ஆந்திரத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பிறகு, ஜூலை மாதத்தில்தான் லட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. அதுவும் ஹைதராபாத்திலேயே ஆய்வகங்கள் இருக்க, குஜராத்துக்குக் கொண்டு சென்று?

முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்துவர் என்பதற்கும் லட்டுக்கு சப்ளை செய்த நெய்யில் விலங்குக் கொழுப்பு இருந்ததாகக் கூறப்படுவதற்கும் எதற்காக முடிச்சுப் போட வேண்டும்? அதுவும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவே லட்டு பிரச்சினையை எழுப்புகிறார்! குறிப்பிட்ட கொஞ்சம்பேர் ஒத்து ஊதுகிறார்கள்!

ஜெகன் முதல்வராக இருந்த காலத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. இப்போது காலம் மாறி சந்திரபாபு நாயுடு முதல்வராகியிருக்கிறார், அவ்வளவுதான் ஒன்லைன் எனத் தோன்றுகிறது. இதற்குத் துணையாகத்தான் கடவுளையும் லட்டையும் எளிய மனிதர்களின் நம்பிக்கைகளையும் இணைத்துக்கொள்கிறார்கள் போல.

(உடல் நலக் குறைவுக்காக உலகம் முழுவதுமுள்ள மக்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துப் பொருள் பொதியப்பட்ட கேப்ஸ்யூல்களின் உறைகளுக்கான மூலப் பொருளும் விலங்குக் கொழுப்பாலானது என்கிறார்கள், அப்படியா?)

இப்போ இது ரொம்ப முக்கியங்களா?

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்கிற கதையாக நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கிடக்க ஒரே நாடு ஒரே தேர்தல் என்று விவாதித்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்ம அரசியல் தலைவர்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலை ஒன்றரை மாதமாகக் கட்டங்கட்டமாக நடத்தியே உருப்படியாக நடத்தி முடிக்க முடியவில்லை நம்ம தேர்தல் ஆணையத்தால். இன்னமும் நூற்றெட்டுக் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாக்குகளின் எண்ணிக்கையைக்கூட சரியாகக் கூற முடியவில்லை.

ஜம்மு – காஷ்மீர், ஹரியாணாவிலும் தேர்தல் நடத்தும்போதே மகாராஷ்டிரத்தில் தேர்தலை நடத்த முடியவில்லை. மத்தியில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சிகள் கவிழும்; மாநிலங்களில் அவ்வப்போது கவிழும். கட்சி மாறுவதும் ஆதரவு மாறுவதும் இங்கே சர்வ சாதாரணம். எப்போது வேண்டுமானாலும் ஜனநாயகத்தின் பெயரால் என்ன வேண்டுமானாலும் நடைபெறும்.

இப்படியாகப்பட்ட இருபத்தெட்டு மாநிலங்களும் எட்டு மத்திய ஆட்சிப் பிரதேசங்களும் இருக்கிற – சுமார் நூறு கோடி வாக்காளர்கள் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம்? சரி, அப்படி மெனக்கெட்டு நடத்திதான் என்ன சாதிக்கப் போகிறார்கள்? (கொஞ்சம் பேர் அதிபர் தேர்தல்தான் ஹிடன் அஜெண்டான்னு கிசுகிசுக்கிறாங்களே!).

ம். ஒருவேளை, போகாத ஊருக்கு வழி சொல்கிறாற் போல பொழுதுபோக்காக ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்களோ, என்னவோ!

இதையும் படிக்க: சொல்லப் போனால்… டாப் விஐபிக்கள் சந்திப்பும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சீசரின் மனைவியும்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024