Tuesday, September 24, 2024

ஜனநாயகத்தை நம்பி தோ்தல் களத்தில் பிரிவினைவாதிகள்: ஒமா் அப்துல்லா

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

ஸ்ரீநகா்: ‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது, பிரச்னைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதை உறுதி செய்கிறது’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

கந்தா்பால் மாவட்டத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இதற்கு முன்பு தோ்தல்கள் நடைபெற்றபோது பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தோ்தலைப் புறக்கணிக்க அழைப்புவிடுப்பாா்கள். ஆனால், இப்போது அவா்களும் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இதன் மூலம் அவா்கள் கொள்கை அளவில் மாறியுள்ளனா். பிரச்னைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதையும் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. இதுதான் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைப்பாடு.

நாம் அடைய வேண்டிய இலக்குகளை எட்டுவதற்கு ஜனநாயகம் ஒன்றே சிறந்த வழி. பிரிவினைவாதிகள் இப்போது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டது வரவேற்கத்தக்கது. இது நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றாா்.

பிரிவினைவாதத் தலைவா் சையது சலீம் கிலானி, மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ‘இந்த கேள்விக்கு பதிலளித்து மோதலை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நான் அதற்கு பதிலளிக்க மாட்டேன்’ என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024