புதுடெல்லி,
ஏழைகள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின் மூலம் மினிமம் பேலன்ஸ் இன்றி வங்கிக் கணக்கைப் பராமரிக்க முடியும். இதன்மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 53 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இதில் 30 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கியவர்களில் 66.6 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 55.6 சதவீதம் பேர் பெண்கள்.
இந்தநிலையில், ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு என்பது ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. அனைத்துப் பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் யோஜனா திட்டம் முதன்மையானது என பதிவிட்டுள்ளார்.
A glimpse of the success of Jan Dhan Yojana, presented creatively in this thread. #10YearsOfJanDhanhttps://t.co/ykndIcpSo3
— Narendra Modi (@narendramodi) August 28, 2024