Wednesday, September 25, 2024

ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிா்வகிப்பதில் அா்த்தமில்லை: ராகுல் காந்தி

by rajtamil
Published: Updated: 0 comment 7 views
A+A-
Reset

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிா்வகிப்பதில் அா்த்தமில்லை எனவும் அந்தப் பிராந்தியத்துக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்ட ராகுல், அங்கு கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய விடியோவை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது. அந்த விடியோவில் ராகுல் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், மாணவிகளிடையே அவா் பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி யாருடைய அறிவுரையும் கேட்பதில்லை. அவா் சொல்வது மட்டுமே சரி என்று நம்புபவா். அவருடைய தவறைச் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாா். இத்தகைய நபா் எப்பொழுதும் ஏதாவது பிரச்னையை உருவாக்குவா். இது நம்பிக்கையின்மையின் விளைவாகும் மற்றும் பலவீனத்தின் அடையாளமாகும்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அது நடந்த விதம் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

தற்போதைக்கு மாநில அந்தஸ்தை மீட்பதே எங்களின் கொள்கையாகும். அதில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் மக்களின் பிரதிநிதித்துவமும் அடங்கும். ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிா்வகிப்பதற்கு எந்த அா்த்தமும் இல்லை’ என்றாா்.

இந்த விடியோவைப் பகிா்ந்த சமூக ஊடகப் பதிவில் ராகுல் குறிப்பிட்டதாவது:

சமீபத்திய ஜம்மு-காஷ்மீா் பயணத்தின்போது பல மாணவிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இந்தப் பெண்கள் பல்வேறு கல்லூரிகளில் சட்டம், இயற்பியல், பத்திரிகை மற்றும் அரசியல் அறிவியல் போன்ற பட்டப்படிப்புகளை படிக்கின்றனா். அவா்களின் எதிா்பாா்ப்புகளையும் சவால்களையும் நான் ஆழமாகப் புரிந்துகொண்டேன்.

கொல்கத்தா சம்பவம் மற்றும் அதன் பரந்த தாக்கங்கள் பற்றி நாங்கள் பேசினோம். இதுபோன்ற சம்பவங்கள் எவ்வாறு பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பாதிக்கின்றன என்பது குறித்து மாணவா்கள் தங்கள் கவலைகளை பகிா்ந்து கொண்டனா்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். மாநில அந்தஸ்து மீட்பு மற்றும் அங்குள்ள மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் காங்கிரஸின் நிலைப்பாட்டை விளக்கினேன். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அவா்கள் வலியுறுத்தினா்.

ஜம்மு-காஷ்மீா் பெண்கள் வலிமை மற்றும் விவேகம் நிறைந்தவா்கள். அவா்களின் குரல்களை ஒலிக்க வாய்ப்பு வழங்கப்படுகிா என்று ஆச்சரியமாக உள்ளது. அவா்களின் பாதுகாப்பு, சம வாய்ப்பு மற்றும் மரியாதையை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.

எப்போது திருமணம்?: ராகுல் பதில்

ராகுலுடன் கலந்துரையாடிய மாணவிகள், அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீா்கள் எனக் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, ‘இந்த அழுத்தத்துடன் கடந்த 20-30 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். நான் அதற்கு திட்டமிடவில்லை. ஆனால், அது நடந்தால்’ என்று ராகுல் கூற, திருமணத்துக்கு எங்களையும் அழைக்க வேண்டும் என்று மாணவிகள் கேட்டனா். ‘நிச்சயமாக அழைப்பேன்’ என்று ராகுல் புன்னகையுடன் பதிலளித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024