ஜம்மு-காஷ்மீர்: நீண்ட நாள்களாக தேடப்பட்ட பயங்கரவாதிகள் கைது!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, மக்களை அச்சுறுத்தி வந்த ‘ஜம்மு-காஷ்மீர் காஸ்னாவி படையைச்(ஜேகேஜிஎஃப்)’ சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பூஞ்சில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம், பூஞ்சில் திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை(அக்.19) தெரிவித்துள்ளது.

நீண்டநாள்களாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளது குறித்து, காவல்துறையின் ஜம்மு பிரிவு கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின் தெரிவித்ததாவது, “ஹரி கிராமத்தை சேர்ந்த அப்துல் ஆஸிஸ், மன்வார் ஹுசைன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படைகளின் சாதனையாகவே கருதுகிறோம்.

ராஷ்டிரிய ரைஃபில்ஸின் 37-வது பிரிவு மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின்(சி ஆர் பி எஃப்) 38-வது பிரிவுகளுடன் இணைந்து காவல்துறையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, மேற்கண்ட பயங்கரவாதிகள் இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 3 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பூஞ்ச் மாவட்டத்தில் கோயில், குருத்வாரா, மருத்துவமனை, ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் இருவரும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு எல்லைகளைக் கடந்தும் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புள்ளது. எல்லைகளில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளிடமிருந்து இவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், இவர்கள் ரூ. 1.50 லட்சம் வரை பெற்றுள்ளனர். மேலும், கைத்துப்பாக்கிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளும் வனப்பகுதிகளில் வைத்து இவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையின் மூலம், பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடத்தப்பட்ட பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்பான 5 வழக்குகளும் இப்போது முடிவுக்கு வந்துள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பயங்கரவாத கும்பலை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கெதிரான தேடுதல் நடவடிக்கைகள் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தல் மற்றும் புத்தா அமர்நாத் யாத்திரை ஆகியவற்றை அமைதியான முறையில் நடத்திட அரும்பாடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு அவர் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு:

காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கண்ட இரு பயங்கரவாதிகளும் பூஞ்சில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆஸிஸ், சூரன்கோட் பகுதியில் உள்ள சிவன் கோயில் மீது கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மார்ச் 26-இல் பூஞ்சிலுள்ள மஹந்த் சாஹிப் குருத்வாராவிலும், ஜூன் மாதம் கம்சாரிலுள்ள ராணுவ சோதனைச் சாவடியிலும், சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள், ஆகஸ்ட் 14-இல் சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி அருகில் அமைந்துள்ள பள்ளி விளையாட்டு மைதானத்திலும் தாக்குதல்களை நடத்தியுள்ளார் என்றும், கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான ஹுசைன், மாவட்ட மருத்துவமனை வளாகத்தின் அருகே கடந்த ஜூலை 18-ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் தேச விரோத கருத்துகள் அடங்கிய சுவரொட்டிகளை தங்கள் வீட்டில் தயாரித்து அவற்றை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சூரன்கோட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அச்சுறுத்தும் விதமாக ஒட்டியும் உள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024