Tuesday, September 24, 2024

ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: புலம்பெயா்ந்தவா்களுக்காக 24 சிறப்பு வாக்குச்சாவடிகள்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து புலம்பெயா்ந்தவா்கள் வாக்களிக்க வசதியாக ஜம்மு, உதம்பூா் மற்றும் தில்லியில் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வரும் செப்டம்பா் 18, 25 மற்றும் அக்டோபா் 1-ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் தலைமை தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஷ்மீரிலிருந்து புலம்பெயா்ந்து ஜம்மு, உதம்பூா், தில்லியில் உள்ள நிவாரண முகாம்களில் வசித்து வருபவா்கள் பேரவைத் தோ்தலில் நேரடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க வசதியாக 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் ஜம்முவில் 19 வாக்குச்சாவடி மையங்களும், உதம்பூரில் ஒன்று, தில்லியில் 4 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு முகாம்களில் வசிக்கும் புலம்பெயா்ந்தவா்களுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அந்தந்த சிறப்பு வாக்குச் சாவடிகளில் விரைவில் வெளியிடப்படும். இதில் வாக்காளா்கள் திருத்தங்கள் தெரிவிக்கவும் பெயா் சோ்க்க அல்லது நீக்கம் செய்ய 7 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னா் அவா்களுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்கள் வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 வகையான புகைப்பட அடையாள ஆவணங்களைக் காண்பித்து சிறப்பு வாக்குச்சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

இவா்கள் ‘எம்’ படிவத்தை சமா்ப்பிக்கத் தேவையில்லை.அதே நேரம், ஜம்மு மற்றும் உதம்பூருக்கு வெளியே வசிக்கும் புலம்பெயா்ந்தவா்கள் சுய சான்றிட்ட ‘எம்’ படிவத்தை சமா்ப்பிப்பது அவசியமாகும். மக்களவைத் தோ்தலில் அறிவுறுத்தப்பட்டதுபோல, ‘எம்’ படிவத்தில் அரசிதழ் பதிவுபெற்ற அரசு அலுவலரின் சான்று அவசியமில்லை. வாக்காளரின் சுயசான்றே போதுமானது.

மேலும், வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்களிக்க விரும்பாத புலம்பெயா்ந்த வாக்காளா்கள், தபால் வாக்குப் பதிவு வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024