2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ இருக்க மாட்டார் என்று எலான் மஸ்க் கணித்துள்ளார்.
இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்ந்து குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மேலும், உலக நாடுகளிலும் கனடா மீதான விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் கூட்டணி கட்சியினரும் அவருடனான கூட்டணியில் இருந்து விலகவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெர்மனி அதிபரை `முட்டாள்’ என்று விமர்சித்த எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க், ஜெர்மனியில் கூட்டணி அரசு வீழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எக்ஸ் பயனர் ஒருவர் “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நீக்குவதற்கும் உங்கள் உதவி தேவை’’ என்று எலான் மஸ்க்கிடம் (நகைச்சுவையைப் போல்) கோரினார். அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், `2025 ஆம் ஆண்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய்விடுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அடுத்தாண்டு அக்டோபருக்குள் நடக்கவிருக்கும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ பெரும் சவாலைச் சந்திக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க:நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல் யார்? அம்பானியோ அதானியோ அல்ல!