Saturday, September 28, 2024

ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு: திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

டெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது. தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதிலும் குறிப்பாக டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க உரிமம் பெற சவுத் குரூப் என்ற நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதா செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. கவிதாவை கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை பணமோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர்.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு கவுதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, 5 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான கவிதாவை பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.

You may also like

© RajTamil Network – 2024