ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை இன்று(நவ. 5) வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் ஜேஎம்எம் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து நின்று இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளாக, மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 ஊக்கத் தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்கள் பயனடையும் வகையில் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை மக்கள் பயனடையும் வகையில் ரூ. 15 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுமென தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையின் 7 வாக்குறுதிகளில், சமூக நீதிக் கொள்கையை ஓர் அங்கமாக இந்த தேர்தல் அறிக்கையில் இணைத்து இடஒதுக்கீடு விவகாரமும் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் இடஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 26 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாகவும், பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீடு 10 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 14 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாகவும் உயர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரேசன் பொருள்கள் 5 கிலோவிலிருந்து 7 கிலோவாக அதிகரிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ. 450க்கு வழங்கப்படுமெனவும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 2,400-லிருந்து ரூ. 3,200-ஆக உயர்த்தியும், பிற பயிர்களுக்கு 50 சதவிகிதம் விலை உயர்த்தியும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுளது.
ஜார்க்கண்ட்டில் 81 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் மொத்தம் இரண்டு கட்டங்களாக இம்மாதம் 13, 20 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவ. 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடபெற உள்ளது.