ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு தனது நம்பிக்கையை அறிவிக்க வேண்டும் என்று ஆந்திரத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “எந்த நபரும் கோயிலின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோயிலுக்குள் செல்வதையும் யாரும் தடுக்கவில்லை. அனைவரும் கோயில் விதிகளைப் பின்பற்றித் தான் ஆக வேண்டும்” என்றார்.

முன்னதாக, திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாக சனிக்கிழமையில் (செப். 28) நடக்கவிருக்கும் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “தனது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதால், திருப்பதிக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது” என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஸ்ரீவெங்கடேஸ்வரா சாமி கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் கோயிலின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விதிகளின்படி, ஹிந்து அல்லாத பக்தர்கள் மலைக் கோயிலில் உள்ள வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்ய தங்கள் பயபக்தியை அறிவிக்க வேண்டும். கோயில் நிர்வாகத்திடம் அனுமதி கோரி, கோயிலில் உள்ள அச்சிடப்பட்ட படிவத்தில், தங்கள் மதத்தை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த சந்திரபாபு நாயுடு, “எதிர்க்கட்சித் தலைவர் திருமலை-திருப்பதி சுற்றுப்பயணத்தைத் தவிர்க்க என்ன காரணம் என்று தனக்குத் தெரியாது. நாங்கள் தடுத்தது போலவும், நோட்டீஸ் அனுப்பியது போலவும் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நேரடியாகக் கேட்கிறேன். உங்களுக்கு ஏதாவது நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதா? அங்கு செல்ல வேண்டாம் என்று யாராவது உங்களைக் கேட்டுக் கொண்டார்களா?.

ஜெகன் மோகன் ரெட்டியின் வருகைக்கு மக்களைத் திரட்டுவதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. கோயிலின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும். எந்தவொரு நபரும் கோயிலின் மரபுகள், பழக்கவழக்கங்களைவிட பெரியவர் அல்ல” என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024