ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த அ தி மு க தொண்டர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீரிழப்பால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11 30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஏராளமான சர்ச்சைகள், சந்தேகங்கள் உள்ளன. அவர் சிகிச்சையின்போது, பொங்கல், இட்லி போன்றவைகளை சாப்பிடுவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிக்கைகள் எல்லாம் வெளியிடப்பட்டது.

அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவின் மருத்துவ குறிப்புகள் உள்ளிட்டவைகளில், ஜெயலலிதா மூச்சுத்திணறல், சுயநினைவின்று இருந்ததாகவும், நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்த காலக்கட்டத்தில், ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்ததாக அறிவிப்பு வெளியானது. இது எப்படி சாத்தியமானது? என்று தெரியவில்லை.

மருத்துவ ஆவணங்களின்படி, 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஜெயலலிதாவின் தொண்டையின் நடுப்பகுதியில் துளையிட்டு அதன் வழியாக குழாயை நுழைத்து நுரையீரலுக்கு பிராணவாயு செலுத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் மயக்கநிலையில்தான் இருந்து இருப்பார். ஆனால், ஜெயலலிதாவின் பரிந்துரை பேரில் அவர் கவனித்து வந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என கவர்னர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட கடிதம் வெளியாகவில்லை.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், வேட்பாளர்கள் அறிவிக்கும் ஆவணத்தில் விரல் ரேகை பதிவு பெறப்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதா சுயநினைவில் இல்லை என்று தெரிகிறது.

அதுமட்டுமல்ல, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11 30 மணிக்கு இறந்தார் என்று ஒருபுறம் கூறினாலும், மறுபுறம் அன்று இரவு 7 மணிக்கு புதிய முதல்-அமைச்சரை தேர்வு செய்ய அ.திமு.க. அலுவலகத்தில் எம் எல் ஏக்கள் ஏன் கூடினார்கள்? என்பதற்கு விளக்கம் இல்லை.

ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த டாக்டர் சுதா சேஷய்யன், டிசம்பர் 5-ம் தேதி இரவு 10 30 மணிக்கு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், தனக்கு போன் செய்து ஜெயலலிதா இறந்து விட்டதாகவும், அவரது உடலை 'எம்பார்மிங்' செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், இரவு 11.40 மணிக்கு சென்றதாகவும், அதற்கு 10 மணி நேரத்துக்கு முன்பே ஜெயலலிதா இறந்து இருப்பார் என்று கூறியுள்ளார். இவர் சொல்வது உண்மை என்றால், இரவு 11 30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ ஆஸ்பத்திரி பொய் சான்று அளித்துள்ளது என்பது நிரூபணமாகும்.

2012-ம் ஆண்டு சசிகலா, தினகரன் உள்பட அவர்களுடைய 11 உறவினர்களை போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். பின்னர் சசிகலாவை மட்டும் மீண்டும் சேர்த்துக்கொண்டார். ஆனால், ஜெயலலிதா சிகிச்சையின்போது, இவர்கள் எல்லோரும் அப்பல்லோ ஆஸ்பத்தியில் தங்கினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாலும், ஜெ.தீபாவை ஏன் அனுமதிக்கவில்லை? என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவேண்டும் என்ற அமெரிக்க டாக்டர்களின் பரிந்துரையை அப்பல்லோ டாக்டர் ஆப்ரகாம், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நிராகரித்து உள்ளார்கள்.

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு இருந்தும். அவருக்கு கட்டுப்பாடின்றி உணவுகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பீலே, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மறுத்து விட்டார்.

அ தி மு க நிர்வாகி திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் மரணம் குறித்து பொய்தான் சொன்னோம். மன்னித்து விடுங்கள் என்று பேசியுள்ளார். ஜெயலலிதா மாலை 4 30 மணிக்கு இறந்ததாக தகவல் வந்ததாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், அதுகுறித்து விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிக்கவில்லை. மொத்தத்தில், ஜெயலலிதாவின் சாவில் உள்ள மர்மங்கள் வெளியாகவில்லை. அதனால், இதுகுறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமதுசபீக் ஆகியோர், இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024