ஜோசியராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜோசியராக மாறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதோடு மட்டுமல்ல, திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது; இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பழனிசாமி அவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!

இதையும் படிக்க: அச்சுறுத்தும் டானா: 2013 பைலின் புயல் நினைவில் ஒடிசா மக்கள்! அவ்வளவு மோசமானதா?

எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது! விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக நான் வந்தேன். துணை முதலமைச்சராக இருக்கும் தம்பி உதயநிதி வந்தார். அமைச்சர் பெருமக்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தார்கள். குறைகளை கேட்டார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள். இது தி.மு.க. ஆனால், மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் நம்முடைய பழனிசாமி.

அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டிருக்கிறார். அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

திமுக-வை பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாக சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை என்று பேசினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024