Friday, September 20, 2024

டி.ஆர். காங்கோவில் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா பதவியேற்பு

by rajtamil
0 comment 35 views
A+A-
Reset

பொருளாதார நிபுணரான துலுகா தனது செயல்திட்டத்தை வழங்கும்போது, ​​பிரதமராக நாட்டிற்கு சேவையாற்றும் முதல் காங்கோ பெண்மணி என்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்.

கின்ஷாசா:

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் (டி.ஆர். காங்கோ) கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் யு.டி.பி.எஸ். கட்சியின் தலைவர் பெலிக்ஸ் சிசெகெடி மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கூட்டணியும் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற்றது. ஆனால், கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில் தாமதம் ஆனதால், புதிய அரசு அமைக்கவும் தாமதம் ஆனது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் (மே) புதிய அரசாங்கம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர், 6 துணை பிரதமர்கள் மற்றும் 10 இணை மந்திரிகள் உட்பட 55 உறுப்பினர்களைக் கொண்ட மந்திரிசபை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மந்திரி சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

துலுகாவின் செயல்திட்டத்திற்கு துணை பிரதமர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றனர். பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா பதவியேற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, பொருளாதார நிபுணரான துலுகா தனது செயல்திட்டத்தை வழங்கும்போது, பிரதமராக நாட்டிற்கு சேவையாற்றும் முதல் காங்கோ பெண்மணி என்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்.

தலைநகர் கின்ஷாசாவில் சுமார் 26 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் கணிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அகாடமியை உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் "வளர்ந்து வரும் காங்கோ" என்ற முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைப்பதாகவும் துலுகா வாக்குறுதி அளித்தார். தேசிய பாதுகாப்பு, பொருளாதார பன்முகத்தன்மை, உள்கட்டமைப்பு இணைப்புகள், பொது சேவைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

பெல்ஜியத்தின் லிப்ரே டி ப்ரூக்செல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற துலுகா, கடந்த ஆண்டு மார்ச் மாதம், திட்டமிடல் துறைக்கான இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார். 2020 முதல் 2023 வரை, ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்த கண்காணிப்பு கவுன்சிலின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024