Sunday, September 22, 2024

டி.என்.பி.எல்: சச்சின் அரைசதம்…கோவை கிங்ஸ் 141 ரன்கள் சேர்ப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சேப்பாக் தரப்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சேலம்,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணியாக விளங்குகிறது.

இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இன்று சேலத்தில் நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சுரேஷ் குமார் 4 ரன், சுஜய் 6 ரன் எடுத்த நிலையில் அபிஷேக் தன்வர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் ஷாருக்கான் 8 ரன்னில் அவுட் ஆனார். இதனால் கோவை அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து சச்சின் மற்றும் முகிலேஷ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய இந்த இணை அணியின் ஸ்கோர் 88 ரன்னாக உயர்ந்த போது பிரிந்தது. இதில் முகிலேஷ் 31 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ராம் அரவிந்த் 12 ரன்னிலும், அடுத்து வந்த அதீக் உர் ரஹ்மான் 3 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சச்சின் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. கோவை கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சச்சின் 63 ரன்கள் எடுத்தார். சேப்பாக் தரப்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆட உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024