Tuesday, September 24, 2024

டி.கே. சிவக்குமார் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

புதுடெல்லி,

கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியாக இருக்கும் டி.கே. சிவக்குமார் வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. 2013 முதல் 2018ம் ஆண்டு வரையிலான அவருடைய வருமானத்தை கணக்கில் கொள்ளும்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது என சி.பி.ஐ. தெரிவித்தது.

சி.பி.ஐ.-யின் இந்த வழக்குப்பதிவை எதிர்த்து டி.கே. சிவக்குமார் 2021-ல் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில் சி.பி.ஐ. விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக மாநில ஐகோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி டி.கே. சிவக்குமார் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், சிவகுமாருக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கு "முற்றிலும் சட்டவிரோதமானது" என்றனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 41 லட்சம் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார். வழக்கை, வருமான வரித்துறை ஏற்கனவே விசாரித்து வரும் நிலையில், அதே குற்றச்சாட்டுக்காக சி.பி.ஐ.-யும் ஒரே நேரத்தில் விசாரணையைத் தொடங்க முடியாது என்று அவர் கூறினார். இரண்டும் வெவ்வேறு விசாரணைகள் என தெரிவித்த நீதிபதி திரிவேதி, சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்வதற்கான வாதங்களை நிராகரித்தார்.

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் மறுத்துவிட்ட நிலையில், தற்போது சுப்ரீம்கோர்ட்டும் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024