Thursday, November 7, 2024

டெங்கு பாதிப்பால் 8 பேர் பலி: தமிழக அரசு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இதுவரை 8 பேர் பலியானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியான செய்திக் குறிப்பு:

வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது.

இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் பலியாகினர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும். டெங்கு பரவுவதைத் தடுக்கவும், டெங்கு தொடர்பான இறப்புகளை மேலும் குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த தீவிர நடவடிக்கைகளால், டெங்கு இறப்பு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

டெங்கு பாதிப்பைக் கண்காணிப்பதில் அரசு விழிப்புடன் உள்ளது, மேலும் பின்வரும் முக்கிய நடவடிக்கைகளுடன் மாநிலத்தில் மேலும் பாதிப்புகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, தடுக்கவும் அரசு தயார் நிலையின் உள்ளது.

24/7 காய்ச்சல் சிகிச்சை மையங்கள்: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.

தினசரி காய்ச்சல் கண்காணிப்பு: 4,031 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நோய் கண்காணிப்பு அறிக்கைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மருத்துவ முகாம்கள்: நடமாடும் மருத்துவக் குழுக்கள் 23,689 முகாம்களை நடத்தி, நவம்பர் 5, 2024 நிலவரப்படி 13,18,349 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். வெளிநோயாளிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.

காய்ச்சல் நோயாளிகளுக்கான ஆய்வக சோதனை: டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை மையங்கள் 35ல் இருந்து 4,031 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீவிர கொசு கட்டுப்பாடு: புகை தெளித்தல், கொசு புழு கட்டுப்பாடு, கொசு அடர்த்தி கண்காணிப்பு மற்றும் வைரஸ் ஆன்டிஜெனைக் கண்டறிய கொசு பகுப்பாய்வு ஆகியவை மாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. கொசுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் – பைரெத்ரம், டெமிஃபோஸ் மற்றும் மாலத்தியான் ஆகியவை போதிய அளவில் கையிருப்பு உள்ளது.

அதிவிரைவு குழுக்கள்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் அதிவிரைவு குழுக்களை வழிநடத்துகின்றனர்.

வீடு தோறும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்துதல்: நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு தடுப்புக்காக தினமும் 25,000 DBC பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

போதிய மருத்துவப் பொருள்கள்: டெங்கு மேலாண்மைக்கு தேவையான மருந்துகள், ரத்தம் மற்றும் பிளேட்லெட் ஏற்றுதல் மற்றும் பரிசோதனை நுகர்பொருட்கள் மருத்துவமனைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: இந்தியர்களுக்கு கசப்பான செய்தி: குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்!

பொது விழிப்புணர்வு முயற்சிகள்: டெங்கு மற்றும் பிற தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பல்துறைசார் ஒருங்கிணைப்பு: அனைத்து துறைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்ககம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, நகர்ப்புற ஊரக இயக்ககம் , ஊரக மற்றும் பஞ்சாயத்து துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS), பள்ளி/கல்லூரி கல்வி மற்றும் இந்திய மருத்துவ முறை ஆகியவை டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்திட தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள்: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர், மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் வாராந்திர ஆய்வுகளை நடத்தி டெங்கு பாதிப்பு தடுப்பதை பற்றிய முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் செய்கிறார்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசின் தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சலால் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், மேலும் மாநிலம் முழுவதும் பரவும், தொற்று நோய்கள் பரவாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024