Friday, September 20, 2024

“டெல்லியின் ஒரே முதல்-மந்திரி கெஜ்ரிவால்தான்…” – அதிஷி மர்லினா

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஜ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் தலைமை செயலகத்துக்கு செல்ல கூடாது. எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார்.

நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய போவதாக திடீரென அறிவித்தார். மக்கள் என்னை நேர்மையானவர் என கருதி மீண்டும் வெற்றி பெற வைத்தால் மட்டுமே முதல்-மந்திரி நாற்காலியில் அமருவேன் என அவர் சபதமிட்டார். கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர் பதவி விலகுவதாக அறிவித்ததால் டெல்லி புதிய முதல்-மந்திரி யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் மந்திரி பதவிக்கு மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்டவர்கள் பெயர்களும் அடிப்பட்டது. கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும் இந்த போட்டியில் இருந்தார். முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் முன்னாள் துணை-முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ராகவ் சதா ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு கொடுக்கலாம் என விரிவாக ஆலோசித்தனர். இது பற்றி கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள், மந்திரிகள் மற்றும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களையும் கெஜ்ரிவால் தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இன்று 2-வது கட்டமாக கெஜ்ரிவால் தனது இல்லத்தில் மீண்டும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பகல் 11.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 57 பேரும் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பதவிக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து வரும் அதிஷி பெயரை கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார்.

இதனை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இதையடுத்து டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிஷிக்கு கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வரை அதிஷி முதல்-மந்திரி பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபைக்கு அடுத்து ஆண்டு (2025) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 4.30 மணிக்கு கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார். இதனை ஏற்றுக்கொண்டு புதிய அரசை அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார்.

இதைத் தொடர்ந்து அதிஷி தலைமையில் புதிய மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு கவர்னர் வி.கே. சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார். மந்திரி சபையில் ஏற்கனவே உள்ளவர்களுடன் 2 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒருவர் தலித்தை சேர்ந்த எம்.எல்.ஏ. என டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழா முடிந்ததும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் டெல்லி சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, "டெல்லியின் ஒரே முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்தான். கெஜ்ரிவாலை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதே எங்களின் இலக்கு. சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது வைத்த நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை முதல்-மந்தியாக நான் ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுவேன் என்பதை டெல்லி மக்களுக்கும், சக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது என்னுடைய ஒரே இலக்கு, டெல்லி மக்களைப் பாதுகாத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவதுதான்" என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024