Monday, September 23, 2024

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜனதா: இன்று முக்கிய ஆலோசனை

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

புதுடெல்லி,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி கணக்கை தொடங்காமல் படுதோல்வியை சந்தித்தது. ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியால் பா.ஜனதாவின் வெற்றிக்கு டெல்லியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனை சரி செய்ய பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றது, பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இதனை எடுத்துக் காட்டின. நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற பா.ஜனதா திட்டம் வகுத்து வருகிறது.

டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை பா.ஜனதா இப்போதே கவனிக்க தொடங்கி விட்டது.

இதன் ஒரு கட்டமாக கட்சியின் செயற்குழு கூட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகிறது. டெல்லி நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், வார்டு நிர்வாகிகள் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் உரையாற்ற உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்படு்கிறது. பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

You may also like

© RajTamil Network – 2024