Friday, September 20, 2024

டெல்லி நோக்கி பேரணி தொடருமா? கன்னவுரி எல்லையில் விவசாயிகளுடன் திரிணாமுல் காங். நிர்வாகிகள் சந்திப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 17 views
A+A-
Reset

சண்டிகர்:

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றவேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தொடங்கினர்.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற அமைப்பு) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கே.எம்.எம்.) ஆகிய 2 அமைப்புகள் இப்போராட்டத்தை வழிநடத்துகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லைப் பகுதியான ஷம்பு மற்றும் கன்னவுரி பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் எல்லையை தாண்டி செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், விவசாயிகள் எல்லைப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

பிப்ரவரி 21-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் தடுப்புகளை நோக்கி செல்ல முயன்றனர். மாநில எல்லையைத் தாண்டி டெல்லிக்கு அணிவகுத்து செல்ல முயன்ற அவர்களை, பாதுகாப்பு படையினர் தடுத்தனர். அப்போது, விவசாயிகள் மற்றும் போலீசாரிடையே ஏற்பட்ட மோதலில் 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். அதன்பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்ச் 10-ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், கன்னவுரி எல்லையில் போராடும் விவசாயிகளை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழுவினர் இன்று சந்தித்து ஆதரவு அளித்தனர். அத்துடன் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தொலைபேசியில் விவசாயிகளுடன் பேசினார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க எப்போதும் துணைநிற்கும் என்று உறுதியளித்தார்.

விவசாயிகளை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், முகமது நதிமுல் ஹக், டோலா சென், சாகரிகா கோஸ் மற்றும் சாகத் கோகலே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் விவசாயிகளுடன் இருந்தனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவது குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப உள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் கூறினர்.

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த ஆதரவு, விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. எனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்க முயற்சிக்கலாம் என தெரிகிறது. அதேசமயம், நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024