புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-மந்திரி அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் டெல்லி துணை நிலை கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து புதிய அரசு அமைக்க அதிஷி உரிமை கோரினார். இதையடுத்து, டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தையும், புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதிஷி மற்றும் 5 அமைச்சர்களுக்கான நியமனத்திற்கும் அனுமதியளித்துள்ளார். இந்த நிலையில் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக இன்று அதிஷி பதவியேற்கிறார். டெல்லி துணை நிலை கவர்னர் இல்லத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் அதிஷியுடன் 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.
பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்கும் மூன்றாவது பெண் அதிஷி ஆவார். மேலும், டெல்லியின் இளம் வயது முதல்-மந்திரி என்ற பெருமையையும் அதிஷி பெறுகிறார்.
பதவியேற்புக்கு பிறகு 26 மற்றும் 27-ந் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 70 பேர் கொண்ட டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.