Table of Contents
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சரிவை சந்தித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் இன்று(நவ.6) வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை மீட்ட ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனாலும், துரதிருஷ்டவசமாக இந்திய அணி தோல்வியைத் தழுவி 0-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்து ஒயிட்வாஸ் ஆனது.
இதையும் படிக்க…:ரஞ்சி கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த கேரள வீரர்!
2022 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் அதே ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் தனது சிறந்த தரநிலையைப் பெற்றுள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களிலும் சோபிக்காத இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளனர்.
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 8 இடங்கள் சரிந்து 22-வது இடத்தையும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் சரிந்து 26-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மூன்றாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் விளாசிய டேரில் மிட்சல் 8 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வழக்கம் போல இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 5 வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க…:2 வீரர்களை தக்கவைத்தது ஏன்? பாண்டிங் வியூகத்தில் ஐபிஎல் கோப்பை..! பஞ்சாப் அணி சிஇஓ பேட்டி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் விளாசிய இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் வில் யங் 29 இடங்கள் முன்னேறி 44-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ரபாடா முதலிடத்தில் தொடர்கிறார். ரவீந்திர ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திலும், கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.