தங்கம் கடத்தல் வழக்கில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நேற்று (மே 29) சுங்கத்துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் சிவக்குமார் பிரசாத். இவர் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் என்று தன்னை சுங்கத்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

துபாயில் இருந்து வந்த ஒருவரை வரவேற்பதற்காக சிவக்குமார் பிரசாத் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதற்கிடையே, துபாயில் இருந்து வந்த அந்த பயணி சிவக்குமார் பிரசாத்திடம் சுமார் 500 கிராம் தங்கத்தை ஒப்படைக்க முயன்றபோது இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சிவக்குமார் பிரசாத்திடம் ஏரோட்ரோம் நுழைவு அனுமதி அட்டை உள்ளது. இதனை பயன்படுத்தி அவர் டெல்லி விமான நிலைய வளாகத்தில் புகுந்து, பயணியிடம் தங்கத்தை பெற முயன்றபோது கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சசி தரூர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரசாரத்துக்காக நான் தர்மசாலாவில் இருக்கும்போது, விமான நிலைய வசதி உதவியின் அடிப்படையில் எனக்கு பகுதிநேர சேவையை வழங்கி வரும் எனது முன்னாள் ஊழியர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

எந்தவொரு குற்ற செயலையும் நான் மன்னிக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்க அதிகாரிகளின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். சட்டம் அதன் நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், காங்கிரஸ் சார்பில் சசி தரூரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024