Wednesday, November 6, 2024

தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

சென்னை,

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.

இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததையடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை அதிகாரி, சாட்சியங்களை வேறு வகையில் பதிவுசெய்ததாகவும், முக்கிய தவறு நடந்திருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். எனவே விருதுநகரில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை முதலில் இருந்தே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் இதற்கான விசாரணையை நடத்த வேண்டுமெனவும், வழக்கின் விசாரணைக்காக அமைச்சர்கள் இருவரும் வருகிற 11-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024