Thursday, September 19, 2024

தஞ்சையில் 25 பெருமாள்கள் கருட சேவை

by rajtamil
Published: Updated: 0 comment 30 views
A+A-
Reset

தஞ்சையில் 25 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சை,

வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் உள்ள 25 பெருமாள் கோவில்களில் இருக்கும் உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி தஞ்சையில் உள்ள வைணவ திருக்கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள் கோவிலில் 90-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கருட சேவையையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை நீலமேகப்பெருமாள் கோவில், மணிகுன்றாப்பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜபெருமாள் கோவில், நவநீதகிருஷ்ணன் கோவில், மேலவாசல் ரெங்கநாதர் கோவில், விஜய ராமர் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், ஜனார்த்தன பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கீழ கோதண்டராமர் கோவில், கீழ சிங்கபெருமாள்கோவில், பூலோக கிருஷ்ணர் கோவில், படித்துறை வெங்கடேசப்பெருமாள் கோவில், பஜார் ராமர் கோவில் உள்ளிட்ட 25 கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

25 கருட சேவையை தரிசித்தால் 4 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும், கருட சேவை தரிசனம் சகல தோஷநிவர்த்தி தரும் என்பதும் ஐதீகம்.. இந்த கருட சேவையின் போது பக்தர்கள் பெருமாள் சாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். கருட சேவைக்கு முன்னர் பக்தர்கள் பாடல்களை பாடியவாறும் சென்றனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர்.

இந்த கருட சேவையில் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

You may also like

© RajTamil Network – 2024