Wednesday, September 25, 2024

தடுமாறும் பல்கலைக்கழகங்கள்: முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 536 ஆசிரியர் பணியிடங்களில் 350 இடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெருமளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 6 ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருவதால், மொத்தமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 536 ல் இருந்து கிட்டத்தட்ட 200 ஆக குறைந்து விட்டது. இரு துறைகளில் ஒரே ஒரு பேராசிரியர் கூட இல்லை என்பதால், பிற துறைகளின் பேராசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பேராசிரியர்கள் பற்றாக்குறையை போக்க 140-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களால் நிலையான பேராசிரியர்களுக்கு இணையான தரத்துடன் கற்பிக்க முடியவில்லை என்று மாணவர்களும், கல்வியாளர்களும் கூறுவதாக தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும் தான் என்றில்லாமல், உயர்கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பேராசிரியர்களின் எண்ணிக்கை ஓரளவு மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கோவை பாரதியார், சேலம் பெரியார் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் உத்தேசமாக 3,500 பேராசிரியர் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகத் தான் உள்ளன. இது பல்கலைக்கழகங்களின் கல்வி, ஆராய்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

இப்போது தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதன் முதல் கட்டமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்குமான பொதுப்பல்கலைக்கழக சட்டத்தை இயற்றி, அவற்றின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் வீண்செலவுகளை குறைப்பது, வருவாயை அதிகரிப்பது ஆகியவை குறித்தும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து வழங்குவதற்காக கல்வியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும். குறித்த காலத்தில் வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024