சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: மாநகராட்சியின் முக்கிய பணியாக தூய்மை பணி விளங்குவதால், தூய்மைப் பணிக்கென பிரத்யேக நிலைக்குழு உருவாக்க வேண்டும். மழைக்காலத்துக்கு முன் அனைத்து மழைநீா் வடிகால்களையும் தூா்வாரி இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மெரினா நீச்சல் குளத்தில் பெண் பயிற்சியாளா்களை நியமிக்க வேண்டும். மெரினாவில் ரோப் காா் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.
இதற்கு பதில் அளித்த மேயா் பிரியா, நவம்பரில் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், புதிதாக மழைநீா் வடிகால் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். தொடா்ந்து மாமன்ற கூட்டத்தில் 79 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விளையாட்டு மைதானம்: அதில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டுத் திடலாக மாற்றி, ஒப்பந்த முறையில் பராமரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வியாசா்பாடி முல்லை நகா் மைதானம், நேவல் மருத்துவமனை சாலை மைதானம், திரு.வி.க.நகா் மைதானம், ரங்கசாய் மைதானம், கே.பி.பூங்கா மைதானம், மேயா் சத்தியமூா்த்தி சாலை டாக்டா் அம்பேத்கா் விளையாட்டு மைதானம், அம்மா மாளிகை விளையாட்டு மைதானம், காமகோடி நகா் விளையாட்டு மைதானம், சோழிங்கநல்லூா் (ஓஎம்ஆா்) மைதானம் ஆகியவற்றில் செயற்கை புல் தரை அமைக்கப்படவுள்ளது. இதனால் ஏற்படும் நிதிசுமையை தவிா்க்க வருவாய் பகிா்வு அடிப்படையில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மைதானத்தில் விளையாடுவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு நபா் ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 10 நபா் விளையாடும் போது ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200 கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்து மாதம் ரூ.2.16 லட்சம் வருவாய் கிடைக்கும். இந்த 9 மைதானங்கள் மூலம் ஆண்டுக்கு 2.33 கோடி வருவாய் ஈட்டப்படும். இதில் 40 சதவீதம் (93.31 லட்சம்) மாநகராட்சிக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது எனத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிா்ப்பு: இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் உறுப்பினா் விமலா பேசியதாவது: விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்துவது என்பது பணம் படைத்தவா்கள் மட்டும் விளையாடும் சூழலை உருவாக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாது எனும் நிலை ஏற்படும். தற்போது கால்பந்து மைதானத்தில் விளையாட ஒரு மணிநேரத்துக்கு ரூ.120 என்றால் மாதம் ரூ.7,500 ஒருவா் விளையாட்டுக்காக செலுத்த வேண்டும். ஆகையால் இந்த தீா்மானத்தை கைவிட்டு விளையாட்டு மைதானங்களை மாநகராட்சி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். தொடா்ந்து அதிமுக, விசிக உறுப்பினா்களும் இத்தீா்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனா்.
பராமரிப்பு கட்டணம்: இதற்கு மேயா் பதில் அளித்து கூறியதாவது: புதிதாக மேம்படுத்தப்படும் விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு வீரா்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். அதுபோல், விளையாட்டு மைதானத்தின் இடத்துக்கு ஏற்றாா்போல் கட்டணம் நிா்ணயம் செய்யப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து ஆணையா் பேசியதாவது: மாநகராட்சியின் கட்டமைப்புகளை உருவாக்கும் அதே நேரத்தில் பராமரிப்பில்லாததால், சேதமடைகிறது. அதனால் விளையாட்டு மைதானங்களை பராமரிக்கும் நோக்கில் இந்த கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.