தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 சதவீதம் பணிகள் நிறைவேறியிருப்பதாகவும், மீதமுள்ள 40 சதவீதம் பணிகளை நிறைவேற்ற ஆணையிட்டிருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்படி பா.ம.க. வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க. அரசு ஒவ்வொரு நாளும் புதிதாக வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்கள் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.

தி.மு.க. ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் உண்மையாகவே 60 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன என்றால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் அமைப்பு பாட்டாளி மக்கள் கட்சியாகத்தான் இருக்கும். ஆனால், இந்த அளவுக்கு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் வாயிலாகவே இதை நிரூபிக்க முடியும்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக இதுவரை 891 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றில் முதல்-அமைச்சரின் துபாய் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட 6 ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 225 ஒப்பந்தங்கள் நடப்பாண்டின் தொடக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பாக கையெழுத்திடப்பட்டவை ஆகும்.

631 உடன்பாடுகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது கையெழுத்திடப்பட்டவை. அதன்பின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது அமெரிக்காவில் 19, ஸ்பெயினில் 3, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் தலா 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சென்னையில் ஆகஸ்ட் 21-ந்தேதி நடந்த தொழில் முதலீட்டு நிகழ்ச்சியில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்களை மட்டும்தான் அரசு வெளியிட்டதே தவிர, எத்தனை ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தன என்பது குறித்து எந்த புள்ளிவிவரத்தையும் கடந்த வாரம் வரை வெளியிட்டதில்லை.

கடந்த ஜூன் 28-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை மானியக் கோரிக்கையில் கூட இது குறித்த விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. இப்போதுதான் திடீரென 60 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தமிழக அரசு முதன்முறையாக கூறியுள்ளது. அது நம்பும்படியாக இல்லை.

தமிழ்நாட்டுக்கு 60 சதவீத முதலீடு வந்தது உண்மை என்றால், செயல்பாட்டுக்கு வந்த தொழில் திட்டங்கள், அவை தொடங்கப்பட்ட தேதி, முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கிய தொழில் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டால், தொழில் முதலீடுகள் தொடர்பாக இப்போது எழுப்பப்படும் அனைத்து ஐயங்களுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து விட முடியும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை மதித்து தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதில் தனது தோல்வியை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024