தமிழகத்தில் ஆக.27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

தமிழகத்தில் ஆக.27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாகவும், வட தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 8 செமீ, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், கோவை மாவட்டம் ஆழியார், விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், சிவகாசி, அருப்புக்கோட்டை, தேனி மாவட்டம் பெரியாறு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

லட்சத்தீவை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சூறாவளிக் காற்று: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024