Monday, September 23, 2024

“தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் கைது…” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆதங்கம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

“தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் கைது…” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆதங்கம்

குன்னூர்: “தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதை ஒட்டி, இந்தக் கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (செப்.10) வந்திருந்தார். அவருக்கு குன்னூர் நகர பாஜக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அப்பகுதியில் மக்களைச் சந்தித்த எல்.முருகன் டிஜிட்டல் முறையில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தியா முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி பாரத பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி பாரதிய ஜனதா கட்சி.பாரதிய ஜனதா கட்சியில் 10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் ஏற்கெனவே ஸ்பெயின், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அதனுடைய முதலீடு என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர் கையெழுத்திட்டதாக கூறும் நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. இது ஒரு கண்துடைப்புக்கான பயணமாக உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த முதலீடும் புதிதாக வரப்போவதில்லை.

தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது. அவர் (மகாவிஷ்ணு) என்ன பேசினார் என்பதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை. இருந்தபோதிலும் ஒரு நபர், ஆன்மிகம் பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்யப்படுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் என்பது மிகப் பெரிய ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்ட பூமி. இங்கு போலி திராவிடத்துக்கு எல்லாம் இடமில்லை.

பாஜக எந்த இடத்திலும் இந்தியை திணிப்பதில்லை. புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஆரம்பக் கல்வியை தாய் மொழியாம் தமிழில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதற்கான நிதி வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024