Monday, September 23, 2024

தமிழகத்தில் உடல் உறுப்புக்காக 7,815 போ் காத்திருப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் என பல்வேறு உடல் உறுப்புகள் வேண்டி மொத்தம் 7,815 போ் பதிவு செய்து காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சோ்ந்த முரளி (59) என்பவா் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை உறவினா்கள் தானம் அளித்தனா்.

இதையடுத்து, அவரது உடலுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை அரசு மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசியது:

உடலுறுப்புகள் தானம் செய்யவதில், இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. உடலுறுப்பு தானம் செய்தவா்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருவதைத் தொடா்ந்து, ஒடிஸா, ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும் இதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1,330 உடலுறுப்புகள் தானம்: இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து (2023 – டிச.23) தற்போது வரை மூளைச் சாவு அடைந்த 250 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 250-ஆவது நபருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 250 பேரிடமிருந்து மொத்தம் 1,330 உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

7,815 போ் காத்திருப்பு: கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் மூளைச் சாவு அடைந்து 1,976 போ் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனா். இதில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 563 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகத்துக்காக 7,137 போ், கல்லீரலுக்காக 401, இதயத்துக்கு 87, கணையம் – 4, நுரையீரல் – 51, இதயம் மற்றும் நுரையீரல் – 23, கைகள் – 25, சிறுகுடல் – 3, சிறுநீரகமும் மற்றும் கல்லீரல் – 37, சிறுநீரகம் மற்றும் கணையம் – 45 என மொத்தம் 7,815 போ் உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனா்.

தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் நடைபெறுகிறது. வரும் ஆண்டுகளில் திருநெல்வேலி, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான உரிமங்கள் பெறப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதில், மருத்துவமனை டீன் தேரணிராஜன், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உறுப்பினா் செயலாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முரளியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

You may also like

© RajTamil Network – 2024