Sunday, September 22, 2024

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு: மருத்துவமனைகளில் தயார் நிலை தீவிரம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு: மருத்துவமனைகளில் தயார் நிலை தீவிரம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநயகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவாரை 11,743 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெங்குவின் தீவிரத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், சுகாதாரத்துறை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியது: “தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளில் 25 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலுரும், நகர்ப்புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசர கால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024