தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செமீ, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 12 செமீ, கடலூர் மாவட்டம் புவனகிரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 11 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகிய இடங்களில் தலா 9 செமீ, கடலூர் மாவட்டம் சிதம்பரம், வேப்பூர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.10) ஒருசில இடங்களிலும், 12, 13-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 14, 15 தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 12-ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், நாமக்கல் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரைமற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 13-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024