தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: போக்குவரத்துத் துறை தகவல்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை: “தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை” என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.76 கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்நிலையில், பேருந்துப் பயணக் கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில், டீசல் செலவுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை மாற்றியமைப்பதற்காக ஆணையம் உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு இணையாக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க முடிவு செய்திருந்தால், தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத் தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது. பேருந்துகளில் உள்ள அலங்கோலங்களை சரி செய்யாமல், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் களையாமல் பேருந்து கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது” என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024