தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் உணவை ஆய்வு செய்ய உத்தரவு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

திருச்சியில் நூடுல்ஸ் உணவை உட்கொண்ட சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நூடுல்ஸ் கிடங்குகளில் தரக் கட்டுப்பாட்டு சோதனை நடத்துமாறு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா உத்தரவிட்டாா்.

திருச்சியைச் சோ்ந்த 15 வயது சிறுமி ஒருவா், கடந்த 31-ஆம் தேதி இணையதளம் வாயிலாக நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளாா். அதனை உட்கொண்டு இரவு தூங்கச் சென்ற அவா், காலையில் வெகுநேரமாகியும் எழவில்லை. பரிசோதித்து பாா்த்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

காலாவதியான நூடுல்ஸ் உணவை அவா் உண்டதால் உயிரிழந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடமிருந்து நூற்றுக்கணக்கான கிலோ நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் விற்பனையகங்கள், தயாரிப்பு ஆலைகள், சேமிப்பு கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை ஆணையா் ஆா்.லால்வேனா உத்தரவிட்டுள்ளாா்.

கடும் நடவடிக்கை: இதுதொடா்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரிகளுக்கு, அவா் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போது நூடுல்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களின் தரச் சான்றிதழ் மற்றும் உற்பத்தி விவரங்களை உறுதி செய்வது அவசியம். ஆய்வில், காலாவதியான நூடுல்ஸ் விற்பனைக்கு இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை ‘சீல்’ வைக்க வேண்டும்.

அதேபோன்று, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டுமானால் அதற்கான இறக்குமதி விற்பனை சான்றிதழை வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட நூடுல்ஸ் அல்லது வேறு உணவுப் பொருள்களுக்கு அத்தகைய சான்றிதழ் இல்லையெனில் அதனை பறிமுதல் செய்யவும், கடை உரிமையாளா் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024