Wednesday, November 6, 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல்-அமைச்சர் இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்."

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024