Monday, September 23, 2024

தமிழக கனிமவள துறையில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு: சிறப்பு குழு அமைத்து ஆய்வு நடத்த கோரிக்கை

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

தமிழக கனிமவள துறையில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு: சிறப்பு குழு அமைத்து ஆய்வு நடத்த கோரிக்கை

திண்டுக்கல்: தமிழகத்தில் கனிமவளத் துறையில் பலகோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த மோசடியை தடுக்க மாநில அளவில் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என துறை அலுவலர்களே கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனிமவளத் துறையில் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைப் போல், மாநில அளவில் பல கோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதை தடுக்க சிறப்புக் குழு அமைப்பது குறித்து, இத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இயங்கிவரும் கனிமவளத் துறையில், ‘மாவட்ட மினரல் பவுண்டேஷன்’ மூலம் தற்காலிக பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று, தங்கள் செல்போன் மூலமாகவே அரசுக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பணம் செலுத்தும்போது போலி சலான்களை கொடுத்து, அரசுக்கு குறைவான பணத்தை செலுத்தி நிதி மோசடியில் ஈடுபடுவதாகப் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல துணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலகத்துக்கு வராமலேயே தங்கள் பணிகளை தற்காலிக பணியாளர்கள் மூலமாகவே செய்து வருகின்றனர். பல மாவட்டங்களில் கனிமவளத் துறையில் நிரந்தரமாக உதவி இயக்குநர்கள் இல்லை. இந்த பணியிடத்தை நிரப்புவதில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கனிமவளஅலுவலகத்திலும் பண பரிவர்த்தனைகள், நடைச்சீட்டு வழங்குதல், கோப்புகள் தயாரித்தல் என அனைத்து பணிகளும் தற்காலிக பணியாளர்கள் மூலமாகவே நடக்கின்றன. இவர்களில் சிலர் செய்யும் தவறுகளால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கனிமவளத் துறை அதிகாரிகளே பலிகடா ஆகின்றனர். எனவே, அரசுக்கு பணம் செலுத்தும் சலான் முறையில் வெளிப்படைத்தன்மை, போலி சலான்களை எளிதில் கண்டறியும் முறையை அமல்படுத்த வேண்டும். தற்காலிக பணியாளர்கள் நிதி கையாள்வது தவிர்க்கப்பட வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக்குப் பின் பணியில் இருந்து தற்காலிகப் பணியாளர் நீக்கப்பட்டார். இதேபோல், தற்போது தூத்துக்குடி மாவட்ட கனிமவளத் துறையில் பணிபுரியும் தற்காலிகப் பணி யாளர் ஒருவர் இ-சலான் மூலம் ரூ.60 லட்சம் வரை குவாரி உரிமையாளரிடமிருந்து பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த, மாநிலபுவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணை யர் எ.சரவணவேல்ராஜ், கடந்த வாரம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதுபோன்ற முறைகேடுகள் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதை சிறப்புக் குழு அமைத்து, மாநில அளவில் முழு ஆய்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024