தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"இலங்கை நெடுந்தீவு அருகே நேற்று இரவு (23.08.2024) மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் காங்கேயன் கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இத்தகைய அட்டூழியத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

முன்னர், பலமுறை இதுபோன்று தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், மீன்களை கடலில் கொட்டுவதும், வலைகளை அறுத்து எறிவதும், படகுகளை சேதப்படுத்துவதும், சிறையில் அடைப்பதும், வழக்கு போடுவதுமான சூழலில் தமிழக அரசு உரிய தலையீடுகள் செய்து, ஒன்றிய அரசை நிர்பந்தித்து, தமிழக மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.எனினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை கடற்படை தொடர்ந்து கூறி வருகிறது. கடும் புயல், காற்று மழை காலங்களில், கடல் எல்லைகளை தீர்மானிப்பது கடினம் என, பல்வேறு கடல்சார் மீனவர் ஒப்பந்தங்கள் உள்ளன. அனைத்தையும் இலங்கை அப்பட்டமாக மீறுகிறது. ஒன்றிய அரசும் வழக்கம் போல் நடந்து கொள்வது தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் தானா என கேள்வி எழுகிறது?

இந்தியாவின் – நட்பு நாடு இலங்கை என கூறப்பட்டாலும், அதன் நடவடிக்கைகள் அவ்வாறு இல்லை. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதோடு ஓர் நிரந்தர தீர்வுக்கு ஒன்றிய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024