தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த சிவராஜ், வர்ஷன், சுமன், மற்றும் புதிய கல்லார் ராஜேந்திரன் ஆகிய மீனவர்கள் 11 பேர் வழக்கம் போல் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

மாலையில் அவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்த மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அனைவரும் இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேர்கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த இரு வாரங்களில் தமிழக மீனவர்கள் 13 பேர் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024