Friday, September 20, 2024

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான இரு மாத தடைக்காலம் கடந்த 15ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. அதன்பின் மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது நாளிலேயே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15ம் நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்களை கைது செய்வதையே சிங்களக் கடற்படை தொழிலாக வைத்திருக்கிறது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை. அதற்காக அவர்களை கைது செய்ய இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை மறுநாள் ஜூன் 20ம் நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா – இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும், இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை அவர்களின் படகுடன் விடுதலை செய்வது குறித்தும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024