தமிழக மீனவா்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி 37 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டது மற்றும் அவா்களின் படகுகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியது தொடா்பாக இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். மீனவா்களின் கைது குறித்து மயிலாடுதுறை மக்களவை எம்.பி. ஆா்.சுதா என்னிடம் தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட மீனவா்கள் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்கும் சிறு மீனவா்கள். சம்பவத்தன்று ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றுள்ளனா். மீட்புப் பணிகளுக்கு உதவி கோரி இலங்கை அதிகாரிகளைத் தொடா்பு

கொண்ட போதிலும், சா்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகள், ஒருங்கிணைந்த முதலீட்டின் மூலம் வாங்கப்பட்ட சமூக சொத்தாகும்.

தொடா்ந்து சிறு-குறு இந்திய மீனவா்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும், அநியாயமாக சொத்துக்களை பறிமுதல் செய்வதும், அவா்களால் பெரும் அபராதம் விதிக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, மீனவா்களையும், அவா்களது படகுகளையும் முன்கூட்டியே விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது 2 ஃபைபா் படகுகளில் மொத்தம் 37 மீனவா்கள், பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மின்பிடிக்க கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றனா். இவா்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டம்பா் 21-ஆம் தேதி மீன்பிடிக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக 3 படகுகளையும் பறிமுதல் செய்து, 37 மீனவா்களையும் கைது செய்தனா்.

Related posts

‘கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என எதிரிகளுக்கு அச்சம்’ – திருமாவளவன்

470 ஏக்கர் பரப்பில் புதிய கார் உற்பத்தி ஆலை: மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Mumbai: Revd Dr. Ananda Maharajan’s Book On Tamil Christian Heritage To Be Released Today At St. John’s Tamil Church In Goregaon