தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சுங்க கட்டண வசூல் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்கள் 5 முதல் 7 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை, தனியார் பங்களிப்பில் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு அதற்குரிய தொகையை வசூல் செய்வதற்குத்தான் சுங்கக் கட்டண வசூல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி 2005-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. இந்த வசூலின் மூலம் இதுவரை மொத்தம் கிடைத்த தொகை எவ்வளவு என்கிற விவரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்ட நிலையில், சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு சார்பில் கடிதம் எழுதியிருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காலாவதியான சுங்கச்சாவடிகளில் தனியார் வசூலிக்கிற தொகை யாருக்கு செல்கிறது? அதில் பயனடைபவர்கள் யார் என்று தெரியவில்லை?. சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகிறது? அடிப்படை காரணம் என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கட்டணம் வசூல் நீடிக்கும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவர்கள் வசூலிக்க வேண்டிய தொகையின் இலக்கு முடிந்தும் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூற விரும்புகிறேன். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தான் விளக்க வேண்டும். தமிழக நெடுஞ்சாலைகளில் பயணிக்கிற வாகன ஓட்டுநர்களை, சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கிற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான ஒரு போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது.

அதன்படி, தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விரைவில் முற்றுகை போராட்டங்களை நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024