தமிழ்நாட்டில் நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா? – அன்புமணி கண்டனம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா? – அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன.தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலை ஆசிரியர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களை நியமிப்பதில் செய்யப்படும் காலதாமதத்தையும், அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்த செய்திகள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டின் தொடக்கத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதமே வெளியிடப்பட்ட பிறகும் அவர்களுக்கு பணியமர்த்தல் ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

அரசு பள்ளிகளுக்கு 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. அந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் எந்த செய்தியும் இல்லை.

கடந்த மே மாதம் வெளியாவதாக இருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையும், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையும் செப்டம்பர் மாதம் முடிவடையப் போகும் நிலையிலும் வெளியாகவில்லை. அதேபோல்,

தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான முதன்மைத் தேவை கல்வி தான். தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி) 6 % செலவிட வேண்டியுள்ள நிலையில், ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான தொகை தான் செலவிடப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்காக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாவது ஒதுக்கப்பட வேண்டும். இதுவும் கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 3% என்ற அளவில் தான் இருக்கும். முதற்கட்டமாக இந்த அளவு நிதியை ஒதுக்கீடு செய்து விட்டு, படிப்படியாக இதை அதிகரிக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024