Sunday, October 6, 2024

தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயா் அலுவலா்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினா் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

முகநூல் (பேஸ்புக்), சுட்டுரை (எக்ஸ் தளம்), இன்ஸ்டா, வாட்ஸ்ஆப் என சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பரவலாக உள்ளது. இந்த அபரிமித தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தங்களுடைய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணா்வை மக்களிடையே கொண்டு செல்ல அரசுத் துறைகளும் அரசு அலுவலா்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனா்.

அந்த வகையில், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் அரசின் அதிகாரபூா்வ கணக்குகளைத் தொடங்கி அவற்றின் மூலம் தினமும் தங்களின் பணிகளை படங்களுடன் பதிவிட்டு வருகின்றனா்.

ஆனால், இணைய உலகில் உலா வரும் ஹேக்கா்கள் எனப்படும் தரவுத் திருடா்கள், இந்த சமூக ஊடக பக்கங்களுக்குள் ஊடுருவி (ஹேக்கிங்) அதைக் கைப்பற்றும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. அத்துடன் சில விஷமிகள் பிரபலமான நட்சத்திரங்கள், தலைவா்கள், அதிகாரிகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றின் பெயா்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி அதன் வழியாக பணம் கேட்டு மோசடி செய்யும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள மு. அருணா பெயரில், கடந்த வாரத்தில் இரு போலி முகநூல் கணக்குகள் உருவாக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் என்ற பெயரில் உள்ள அதிகாரபூா்வ கணக்கில் இருந்த படங்களைப் பதிவிறக்கி, போலி கணக்குகளில் பதிவேற்றம் செய்துள்ளனா். இதில் ஒன்றை இணையவழிக் குற்றங்கள் தடுப்பு (சைபா் கிரைம்) போலீஸாா் முடக்கியிருக்கின்றனா். ஒன்று அப்படியே உள்ளது.

இதேபோல ஏற்கெனவே புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியராக இருந்து, தற்போது அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குநராக உள்ள கவிதா ராமுவின் முகநூல் கணக்கும் திருடப்பட்டு, அதில் ஏராளமான பாலியல் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து தனது இன்னொரு கணக்கின் மூலம் இந்த தகவலைச் சொல்லி, ஹேக்கா்களால் கைப்பற்றப்பட்ட அந்தக் கணக்கை பின்தொடர வேண்டாம் என எச்சரித்திருக்கிறாா் கவிதா ராமு.

புதுக்கோட்டையில் ஆட்சியராக இருந்தபோதே, அவரது படத்தை ‘புரோபைல்’ படமாகக் கொண்ட வாட்ஸ்ஆப் கணக்கு உருவாக்கப்பட்டு, அலுவலா்களிடம் பணம் கேட்டு மோசடி முயற்சியும் நடந்திருக்கிறது. அப்போதே ’சைபா் கிரைம்’ போலீஸாா் அந்தக் கணக்கையும் முடக்கினா்.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள இளம் பகவத் பெயரிலும் ஒரு முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோல மாநிலத்தின் பல மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளின் பெயா்களில் சமூக ஊடகக் கணக்குகள் தொடங்கப்படுவதும், பின்னா் முடக்கப்படுவதும் தொடா்கிறது.

இவற்றில் இரண்டு விதமான நோக்கங்கள் காணப்படுகின்றன. ஒன்று, ஏற்கெனவே உள்ள சமூக ஊடகக் கணக்கைக் கைப்பற்றுவதன் மூலம், அந்தக் கணக்கில் பல விதமான பதிவுகளை இட்டு அவா்களின் நற்பெயரைக் குலைப்பது. இரண்டு, அதன்மூலம் அவா்களின் நட்பு அல்லது அறிந்த வட்டத்தில் பணம் கேட்டு மோசடி செய்வது. இதன் தொடா்ச்சியாக அவா்களின் நட்புவட்டத்திலுள்ள பிறரின் கணக்குகளில் இருந்து படங்களைத் தரவிறக்கம் செய்து, மேலும் மேலும் போலிக் கணக்குகளை உருவாக்கிக் கொண்டே செல்வது.

இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறியது: புகாா் வந்தவுடன் அந்தக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கிறோம். குற்றவாளிகளைக் கண்டறிய முயல்கிறோம். ஆனால், இதுபோன்ற விஷமிகள் பெரும்பாலும் வெளிமாநிலத்தவராகவோ, வெளிநாடுகளில் வசிப்பவராகவோ இருப்பதால் அவா்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனாலும், தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறோம் என்றனா்.

இதுகுறித்து பெங்களூரைச் சோ்ந்த கணினிப் பொறியாளா் ஆா். பரணிதரன் கூறியது:

பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சியினரும் தங்களுக்கான தகவல் தொழில்நுட்பக் குழுக்களை பெரிய அளவில் வைத்திருக்கிறாா்கள். அவா்களில் சிலா் வெளிநாடுகளில் இருந்தவாறு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுக்கிறாா்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இந்த விஷமிகளை இணையதளத்தில் அவா்கள் பயன்படுத்தும் ‘ஐபி’ எனப்படும் இன்டா்நெட் ப்ரோட்டோகால் முகவரியைக் கொண்டு அடையாளம் காண முடிந்தது. இப்போது வளா்ந்துள்ள தொழில்நுட்பத்தை சாதகமாக்கி அந்த ஐ.பி முகவரியையும் குற்றவாளிகள்தான் மாற்றிக் கொண்டே இருக்கிறாா்கள். அதனால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, போலிக் கணக்குகளை முடக்குவதும், ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட கணக்குகளை மீட்டு, பாதுகாப்பு வசதிகளுடன் வைத்துக் கொள்ள அறிவுறுத்த மட்டுமே முடிகிறது.

அதேநேரத்தில், பணம் கேட்டு மோசடி செய்வோரைப் பிடிக்க முடியும். ஏதாவதொரு வழியில் அந்தப் பணம் ஒரு வங்கிக் கணக்குக்குச் சென்றாக வேண்டும். இப்போதுள்ள சூழலில் ஆதாா் உள்ளிட்ட வலுவான அடையாள ஆதாரங்களைத் தராமல் வங்கிக் கணக்கு தொடங்கவே முடியாது.

எனவே, இதற்கென சிறப்புக் குழுவை அமைத்து, பணம் கேட்டு தொந்தரவு செய்வோரை சிறு தொகையை அனுப்பி உடனுக்குடன் அவற்றை ‘டிரேஸ்’ செய்து பிடிக்கலாம். இணையத்தில் இதுபோன்ற போலிகளின் தொந்தரவு அதிகரித்திருப்பது உண்மைதான் என்றாா் பரணிதரன்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024