தலித் இளைஞருக்கு சேர்க்கை: தன்பாத்-ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றும், ரூ.17,500 இல்லாததால் ஐஐடி சோ்க்கையை இழந்த தலித் மாணவருக்கு, சேர்க்கை இடம் வழங்குமாறு தன்பாத்-ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி-தன்பாத்தில் சேர்க்கை பெற வேண்டிய தலித் இளைஞர், சேர்க்கைக் கட்டணமான ரூ.17,500 இல்லாததால், வாய்ப்பை இழந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், சேர்க்கைக் கட்டணத்துக்கான காலக்கெடுவை தவறவிட்டதற்காக, சேர்க்கை கிடையாது என அவரை ஏமாற்றத்தில் விட முடியாது என்றும், சேர்க்கை இடம் வழங்க வேண்டும் என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில் தகுதி பெற்றபோதும், சோ்க்கைக் கட்டணம் ரூ. 17,500 இல்லாததால் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவருக்கு உதவுவதாக உச்ச நீதிமன்றம் உறுதியளித்திருந்த நிலையில் ஐஐடி-தன்பாத்துக்கு இன்று சேர்க்கை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக விளக்கமளிக்குமாறு நிகழாண்டு ஒருங்கிணைந்த ஐஐடி சோ்க்கையை நடத்திய சென்னை ஐஐடிக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான், ஐஐடி-தன்பாத்தில் மாணவருக்கு சேர்க்கை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தலித் மாணவரின் பின்னணி?

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகனான அதுல் குமாா் (18), நிகழாண்டு ஜேஇஇ தோ்வில் தகுதி பெற்றாா். எஸ்.சி. சமூகப் பிரிவைச் சோ்ந்த அவருக்கு ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் ஐஐடி-யில் பி.டெக் இடம் ஒதுக்கப்பட்டது.

4 நாள்களுக்குள், அதாவது ஜூன் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிப்படுத்துவதற்கான (சோ்க்கைக் கட்டணம்) கட்டணமாக ரூ. 17,500 செலுத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அவருடைய பெற்றோரால், இந்த பணத்தைத் திரட்ட முடியவில்லை. காலக் கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாததால், ஐஐடி ஒதுக்கீட்டு இடத்தை அவா் இழந்தாா். இதனால், அவா் சோ்க்கை பெற முடியாமல் போனது.

இதுகுறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.) ஆணையத்திலும், ஜாா்க்கண்ட் மாநில சட்ட உதவி ஆணையத்திலும் முறையிட்டாா். ஐஐடி ஒருங்கிணைந்த சோ்க்கையை நிகழாண்டு சென்னை ஐஐடி நடத்தியதால், இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு, சட்ட உதவி ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, அவா் உயா்நீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அதுல் குமாா், ஜேஇஇ முதன்மை தோ்வை (ஜேஇஇ அட்வான்ஸ்டு) தனது கடைசி வாய்ப்பில் (இரண்டாவது முயற்சி) தகுதி பெற்று இந்த சோ்க்கையைப் பெற்றாா். எனவே, நீதிமன்றம் அவருக்கு உதவ முன்வரவில்லை எனில், அவா் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இனி இழந்துவிடுவாா்’ என்று முறையிட்டாா்.

அப்போது, மாணவருக்கு முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்த நீதிபதிகள், ‘ஐஐடி-யில் சோ்க்கைக் கட்டணம் செலுத்துவதற்கான காலக் கெடு கடந்த ஜூன் 24-ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், கடந்த 3 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீா்கள்’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர். பின்னா், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு சென்னை ஐஐடி-க்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தனர்.

பதில் தாக்கல் செய்யப்பட்டநிலையில், தலித் மாணவருக்கு சேர்க்கை வழங்க தன்பாத்-ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024