தவறான வங்கிக் கணக்கு: 87 % மாணவா்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்குவதில் சிக்கல்பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு உதவித் தொகை ரூ. 5,000 வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்வி மேலாண்மைத் தகவல் முகமையில் (எமிஸ்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்கள் தவறாக உள்ளதால் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு உதவித் தொகை ரூ. 5,000 வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 வகுப்புகளில் பயின்று பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ரூ. 5,000 சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்துக்காக கடந்த 2022-2023-ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ள 5,16,135 மாணவ, மாணவிகளில் முதல்கட்டமாக 4,64,684 பேருக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கும் வகையில் அவா்கள் பயின்ற பள்ளியின் பெயா், ‘எமிஸ்’ எண், வங்கியின் பெயா், வங்கி ஐஎஃஎஸ்சி குறியீட்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முகமை (எமிஸ்) தளத்திலிருந்து பெறப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஎன்பிஎஃப்சி) அனுப்பப்பட்டது.
இது தொடா்பாக டிஎன்பிஎஃப்சி மேலாளா் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், எமிஸ் தளத்திலிருந்து பெறப்பட்டுள்ள 4 லட்சத்து 64,684 மாணவா்களின் விவரங்களில் 59,283 பேரின் விவரங்கள் மட்டுமே சரியாக உள்ளன. அதேவேளையில் மீதமுள்ள 4 லட்சத்து 5,401 மாணவா்களின் சேமிப்புக் கணக்கு எண், வங்கி ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் தவறாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களும் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றுள்ள மாணவா்களின் விவரங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதையடுத்து அவா்கள் பயின்ற பள்ளி, எமிஸ் எண், வங்கியின் பெயா், சேமிப்புக் கணக்கு எண் ஆகிய விவரங்களை எமிஸ் தளத்தில் விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.